குரவைக்கூத்து:
ஒரு குழுவாய் சேர்ந்து ஆடும் நிகழ்வை குரவைகூத்து என்கிறது சங்கஇலக்கியம்.காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவதே குரவை. குரவை பற்றிப் பேசும் சங்கப் பாடல்கள் அனைத்தும் குரவையைக் குழுஆடலாகவே காட்டுகின்றன. குரவையில் வாள்உயர்த்தி ஆடுதல் இடம்பெறாது. குரவை என்பது செழுநிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக்கொட்ப நின்றாடலாகும்.
"குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்
ஆய் அண்டிரன், அடுபோர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று,
வானம் மீன்பல பூப்பின், ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே"
ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிய யானையின் எண்ணிக்கைக்கு வானில் பூத்துக்கிடக்கும் மீனின் எண்ணிக்கையும் ஈடாக முடியாது. அவன் நாட்டில் பலா மரங்கள் மிகுதியாய் இருக்கும். குரம்பைகளில் வாழும் அவன் நாட்டுக் குறவர் மக்கள் மூங்கிலில் பழுக்க வைத்த தேறல்எனும் போதைமிகு கள்ளைப் பருகி, வேங்கை மர முற்றத்தில் குரவை ஆடுவர் என்கிறது இப்பாடல்.
இப்பாடல் பயின்றுவரும் மலைப்பகுதி இன்றைய இடம் நாஞ்சில் பகுதியாய் இருப்பினும், சேரதேச பகுதியான கரிக்கியூருக்கும் இப்பாடல் பொருந்தும்.

No comments:
Post a Comment