Saturday, 24 April 2021

கரிக்கியூர் காட்டெருமைகள்

 கரிக்கியூர் காட்டெருமைகள்:


பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு ஆசியாவின் அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வந்த இந்த பைசன்கள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காட்டெருமைகள் (பாகுபலி படத்தில் ராணா அடக்கும் எருமை) அங்கிருந்து ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா என இடமாற்றம் அடைந்து, நம் இந்திய எல்லையில் உள்ள காடுகளுக்குள் நுழைந்து, ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டதாய் கருதப்படுகிறது. இப்போது நம்முடைய கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் எருமைகள் எல்லாம் அந்த காட்டு எருமைகளின் மேம்பட்ட பிரதிகள்தான் என்றுவிலங்கியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


முரட்டுத்தனமான பைசன்கள், பரிணாம வளர்ச்சியில் அதன் ‘ட்ரெயிட்’ கள் உடம்பினின்றும் விலகிக்கொள்ள, வீட்டில் வைத்து வளர்க்கும் அளவுக்கு, சற்றே வலிமை குறைந்த மனிதனின் கட்டளைகளுக்கு அடிபணியக் கூடிய எருமையினம் உருவாயிற்று. பழங்காலச் சான்றுகள் மொகஞ்சதாரோவின் புதை படிமங்களில் இந்த காட்டெருமைகளின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த அகழ்வாராய்ச்சியில்

கிடைத்த சான்றுகளின்படி, இவை கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு விலங்கினம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதை உறுதிசெய்யும் வண்ணம் 4000 வருடம் முந்தையதாய் கருதப்படும் கரிக்கியூர் ஓவியங்களில் அதிக அளவில் இந்த காட்டெருமைகள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றும் நீலகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏகப்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகிறது.












Thursday, 22 April 2021

குரவைக்கூத்து

 குரவைக்கூத்து:


ஒரு குழுவாய் சேர்ந்து ஆடும் நிகழ்வை குரவைகூத்து என்கிறது சங்கஇலக்கியம்.காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவதே குரவை. குரவை பற்றிப் பேசும் சங்கப் பாடல்கள் அனைத்தும் குரவையைக் குழுஆடலாகவே காட்டுகின்றன. குரவையில் வாள்உயர்த்தி ஆடுதல் இடம்பெறாது. குரவை என்பது செழுநிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக்கொட்ப நின்றாடலாகும்.


"குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,

வேங்கை முன்றில் குரவை அயரும்,

தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்

ஆய் அண்டிரன், அடுபோர் அண்ணல்

இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று,

வானம் மீன்பல பூப்பின், ஆனாது

ஒருவழிக் கருவழி யின்றிப்

பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே"


ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிய யானையின் எண்ணிக்கைக்கு வானில் பூத்துக்கிடக்கும் மீனின் எண்ணிக்கையும் ஈடாக முடியாது. அவன் நாட்டில் பலா மரங்கள் மிகுதியாய் இருக்கும்.  குரம்பைகளில் வாழும் அவன் நாட்டுக் குறவர் மக்கள் மூங்கிலில் பழுக்க வைத்த தேறல்எனும் போதைமிகு கள்ளைப் பருகி, வேங்கை மர முற்றத்தில் குரவை ஆடுவர் என்கிறது இப்பாடல். 


இப்பாடல் பயின்றுவரும் மலைப்பகுதி இன்றைய இடம் நாஞ்சில் பகுதியாய் இருப்பினும், சேரதேச பகுதியான கரிக்கியூருக்கும்  இப்பாடல் பொருந்தும்.



Wednesday, 21 April 2021

குழுவேட்டை

குழுவேட்டை:


எழுவர் கொண்ட குழுஒன்று வேட்டைக்கு புறப்படுவதை இவ்வோவியம் காட்சிப்படுத்துகிறது. முதலாமவன் கேடயத்துடனும், இரண்டாமவன் வளரிபோன்ற ஒரு இயக்கநிலையில் இருகையில் பிடித்தும், மூன்றாமவன் வில்லிலிருந்து அம்பை எய்தியவாறும், நான்காவதாய் உள்ளவன், அம்பை எடுத்து தயார்நிலையில் கையை உயர்த்தியும், ஐந்தாவதாய் உள்ளவன் கையில் கோலை தரையில் ஊன்றி இடுப்பில் கையை ஒய்யாரமாய் வைத்தும், ஆறாவதாய் உள்ளவன் முன்னோக்கியும், ஏழாவதாய் உள்ளவன் கையில் வில் இடையில் வாளுடன் தயார்நிலையில் உள்ளான்.

இவர்கள் சமதளத்திலோ அல்லது சமவெளிப்பகுதியிலோதான் இந்நிகழ்வை நடத்தியிருக்கவேண்டும். அதனையும் இவ்வோவியன் கீழே ஒரு கோடிட்டு காட்சிப்படுத்தியுள்ளான்


.

Tuesday, 20 April 2021

விருந்தோம்பல்

 விருந்தோம்பல்:


விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,

வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகநானூறு:54)


விருந்து எனும் சொல்லிற்கு புதுமை எனும் ஒருபொருளை தொல்காப்பியம் தருகிறது.


பண்டைய தமிழரின் பண்பாட்டில் தலையாய் இருந்த பண்பு விருந்தோம்பல் ஆகும். “பண்டமாற்று முறை வழக்கிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழலில்.இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கால்நடையாகவே மக்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று. 


‘விருந்தோம்பல்’ என்பது தம் இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.


கீழே படத்திலுள்ள பாறைஓவியம் கூறும் செய்தியும் அதுவே. இந்தஓவியம் அமைந்துள்ள கரிக்கியூர் பகுதி, நீலகிரி மலைப்பகுதியின் உயர்ந்த இடத்தில் உள்ளது.எனவே அங்கேயே தங்கியுள்ள நிலைகுடியினர் பெரும்பாலும் வெளியே அலைவதற்கு வாய்ப்பில்லை, தேவையான அனைத்து பொருளுமே அங்கேயே கிடைத்துவிடும், அதையும் தாண்டி அவ்விடத்திற்கு ஏதோ ஒருவிஷயத்தை பொருட்டு வரும் பிறகுடியினரை வரவேற்று மகிழ்வதில் பெரும்உவகை அடைவர். 

அதனையே கீழ்க்கண்ட ஓவியம் உணர்த்துகிறது. தம் கைப்பிடித்து புதிதாய் வருபவரை மகிழ்வாய் வரவேற்று மகிழ்கிறான் இந்த ஆதிக்குடி.



சண்டையிடும் ஓர் வீரனின் சிற்பம்

 ஆனைமேல் துஞ்சினார்:


குறுநில சோழஅரசனாய் இருந்த முதலாம் ஆதித்தன், பல்லவஅரசன் அபராஜிதனை யானையின் மீதேறி, அவரை தாக்கி கொன்றதனால் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை பெற்றார். Karma is a boomerang என்பதைபோல இவரது பேரன் ராஜாதித்தன் இராஷ்டரகூட தளபதி இரண்டாம் பூதுகனால் கடுமையான யுத்தத்தில் கொல்லப்பட்டார், இருவரும் சமமான வீரர்கள் இறுதியில் யானையின் அம்பாரியையே களமாக்கி இராஜாதித்தன் மார்பில் வாளை பாய்ச்சினார், இப்போரின் விளைவால் ஆதித்தன் கடினப்பட்டு பிடித்த தொண்டைமண்டலம் நழுவி ராஷ்ட்ரகூடனான கன்னரதேவன் வசம் ஆனது. இச்சம்பம் கடந்து சுமார் ஒரு நூற்றாண்டு கழிந்து முதலாம் ராஜாதிராஜன் சாளுக்கியடைகளால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டு யையானைமேலேயே இறந்து உயிர்விட்டு, "யானைமேல் துஞ்சிய தேவர்" ஆனார். இதேபோன்றொரு சம்பவம் அவர்களுக்கு சுமார் 2000-3000 வருடம் முன்பு நீலகிரி வனப்பகுதியில் நடந்ததை, அம்மலையில் இருந்த ஓர் ஓவியன் காட்சிப்படுத்தியுள்ளான். 


நீலகிரியில் உள்ள கரிக்கியூர் பகுதி இயற்கையாகவே மிகப்பெரிய வாழ்விடப்பகுதியாய் அமைந்துள்ளது. இம்மலையை ஒட்டி மாயாறு எனும் காட்டாறு ஓடுகிறது. பவானிநீர்த்தேக்கம் உள்ளது. மரங்கள்,கிழங்குகள், மலைத்தேன்கள், வேட்டையாடி உண்ண ஏகப்பட்ட வனவிலங்குகள் என ஒரு குழுவினர் வளமையுடன் வாழ ஏற்றப்பகுதியாய் திகழ்கிறது. எனவே இவ்விடத்தை பிடிக்க நிச்சயமாய் சில இனக்குழுக்களிடையே தொடர் சண்டைகள் நிகழ்ந்ததை, இங்குள்ள ஓவியங்கள் காட்சிபடுத்துகிறது. அதில் ஒன்றுதான் யானைமீதமர்ந்து சண்டையிடும் ஓர் வீரனின் சிற்பம். 

யானைமீதமர்ந்தவன், கீழுள்ள வீரனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனையே இந்த ஓவியன் வரைந்துள்ளான். நடுகல்லிற்கு முந்தைய நிலையாக கூட இவ்வோவியத்தை கொள்ளலாம். பாறை ஓவியம் உள்ள சில இடங்கள் இன்றும் பழங்குடியினரால் வணங்கப்பட்டு வருவதே இதற்கு ஓர் சான்று.



யானையை பிடித்தல்:

 யானையை பிடித்தல்:


அடர்ந்த வனங்களில் சுதந்திரமாய் திரியும் யானைகளை பிடித்துவந்து அதனை தமக்கு இனக்கமாய் மாற்றி, பளுதூக்கும் பணிகளுக்கும், படைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். கரிக்கியூர் பகுதியில் ஏகப்பட்ட யானைகள் இன்றும் உண்டு.

யானைகளை பயம்பு, வாரி, கெட்பி,அபாதம், அவாபதம், வாரிபந்தம், வாசபந்தம், அனுசுபந்தம் என பலவழிமுறைகளில் யானையை பிடித்துள்ளனர்.


"மாப் பயம்பின் பொறை போற்றாது,

நீடு குழி அகப் பட்ட

பீடு உடைய எறுழ் முன்பின்

கோடு முற்றிய கொல் களிறு,

நிலை கலங்கக் குழி கொன்று,

கிளை புகலத் தலைக்கூடி யாங்கு

நீ பட்ட அரு முன்பின்"


புறநானூற்றின் பாடல் ஒன்று பயம்பு முறையில் யானை பிடித்தலை கூறுகிறது. படத்தில் காணப்படும் ஓவியம் பயம்பு முறையில் யானைபிடித்தலை காட்சிப்படுத்துகிறது.


தமிழர் வாழ்வியலில் யானைகள் எனும் புத்தகத்தின் வாயிலாய் இத்தகைய யானையை பிடித்து பழக்கும் முறைகளை விரிவாய் அறியலாம். இப்புத்தகம் நண்பர் தென் கொங்கு சதா சிவம் அவர்களால் எழுதப்பட்டது.



பாறை ஓவியத்தில் கீரியும் பாம்பும்

 பாறை ஓவியத்தில் கீரியும் பாம்பும்:


நான்கு கால்களை கொண்ட கீரியும், காலில்லா ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்பும் துளி கூட தொடர்பில்லாத நிலையில்  இரண்டும் சண்டை போடுகிறது,  காரணம், உணவு வாழிடம் போன்றவற்றில் இரண்டும் ஒருவகைப்பட்டதே. அதனால் மனிதர்கள் இடையே போட்டி பொறாமை இருப்பது போல் பாம்பிற்கும் கீரிக்கும் உணவு சேகரிப்பதில் போட்டி உண்டு.


கரிக்கியூர் பாறை ஓவியத்தில் கீழ்க்கண்ட ஓவியம் உள்ளது.



கரிக்கியூர் பாறை ஓவியம்

 நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் பாறை ஓவியம் குறித்து, பாறைஓவிய ஆய்வாளர்கள், நம் முகநூல் நண்பர்கள் நிறைய கூறக்கேட்டுள்ளேன், இப்பயண வழி சற்று அபாயம் என கூறுவார்கள், காரணம் என்னவெனில்  கடினமான மலைப்பாதை, வனவிலங்குகள் வலசைபாதை, மேலும் உள்ளூர் பழங்குடியினர் உதவி இருந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும். இதுதவிர மலைத்தேனீக்கள் அட்டகாசம் வேறு, நிறைய குழுவினர் மலை உச்சிவரை சென்று தேனிக்கள் விரட்ட, ஓவியங்களை காணாமலே திரும்பி வந்த சம்பவங்கள் கூட உண்டு,  இயற்கையும்,சூழலும் ஒத்துழைத்தால் மட்டுமே இங்கு செல்லுதல் சாத்தியம்.


பாதி வரை கேக்கும் கதை…

முடியாதெனில்…

மீதி கதை தேடாமல்…

யார் சொல்லுவார்…


மாறா படத்தில் வரும் பாடல் வரிகள் இது. என்னதான் முகநூலில் கதை சொன்னாலும், நேரில் அனுபவிக்கும் சுகமே தனிதான்.
















தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி

  தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி : "யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை,ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்க...